புதுவீடு கட்டும்போது சுவிட்ச் பாக்ஸ் அமைக்கும் முறை


புதுவீடு கட்டும்போது சுவிட்ச் பாக்ஸ் அமைக்கும் முறை
x
தினத்தந்தி 27 Aug 2023 1:30 AM GMT (Updated: 27 Aug 2023 1:30 AM GMT)

‘ஹீட்டர்’ பயன்படுத்துபவர்கள், குளியல் அறையின் உள்ளே சற்று உயரத்தில் சுவிட்ச் பாக்ஸை அமைக்கலாம். கம்பி கொண்டு தண்ணீர் சூடு செய்யும் கருவி, சலவை இயந்திரம் ஆகியவற்றை இணைப்பதற்கு குளியல் அறைக்கு வெளியே தரையில் இருந்து 4 அடி உயரத்தில் சுவிட்ச் பாக்ஸ்களை அமைக்கலாம்.

புதிதாக வீடு கட்டும்போது எங்கெல்லாம் மின் இணைப்புக்கான சுவிட்ச் பாக்ஸ் அமைக்கலாம் என்பது குறித்து காண்போம்.

ஹால்:

ஹாலைப் பொறுத்தவரை இரண்டு இடங்களில் சுவிட்ச் பாக்ஸ்களை அமைப்பது நல்லது. மின்விசிறி, மின்விளக்குகளுடன் கூடிய ஒரு இணைப்பும், டி.வி. மற்றும் மின் சாதனங்களை இணைக்க பயன்படும் வகையில் மற்றொரு இணைப்பும் அமைக்கலாம். இதுதவிர, கூடுதல் மின் சாதனங்கள் பயன்படுத்துவதற்காக ஹாலின் சோபா, ஷோகேஸ் அல்லது டி.வி.க்கு எதிரே இருக்கக்கூடிய சுவர்களில் மின் இணைப்புகளை அமைக்கலாம்.

படுக்கை அறை:

படுக்கை அறையில் மூன்று இடங்களில் சுவிட்ச் பாக்ஸ்களை அமைப்பது பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். முதலாவது, அறையின் கதவை திறந்தவுடன் உபயோகிக்கும் வகையில் கதவுக்கு அருகிலும், இரண்டாவது, படுக்கையில் இருந்து கைக்கு எட்டும் தூரத்திலும், மூன்றாவது, டிரெஸ்ஸிங் டேபிள் அல்லது அறையின் ஜன்னல் ஓரத்திலும் அமைக்கலாம். இதில் கதவு மற்றும் படுக்கைக்கு அருகே அமைக்கும் சுவிட்ச் பாக்ஸில் மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றின் மின் இணைப்புகள் இருக்க வேண்டும். இது அனைத்து சூழலிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில், படுக்கைக்கு அருகே மின் இணைப்பு ஓட்டையை மூடும்படியான சுவிட்ச் பாக்ஸை பயன்படுத்தலாம்.

சமையல் அறை:

சமையல் அறையில் இரண்டு இடங்களில் சுவிட்ச் பாக்ஸ்களை வைக்க வேண்டும். ஒரு மின் இணைப்பை குளிர்சாதனப் பெட்டிக்காக அறையின் மின்விளக்கு இணைப்புகளுடன் சேர்ந்து இருக்கும்படி அமைக்கலாம். மற்றொரு இணைப்பை அடுப்பிற்கு அருகில் இருக்கும் தளம் அல்லது செல்ப் தளத்திற்கு அருகே தரையில் இருந்து 3 அடி உயரத்தில் இருக்குமாறு அமைக்கலாம். அது சமையலுக்கு பயன்படும் மின் உபகரணங்களை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும். பாத்திரம் கழுவும் இடம் மற்றும் அடுப்பிற்கு ஒரு அடி இடைவெளியில் மின் இணைப்புகளை அமைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

குளியல் அறை:

'ஹீட்டர்' பயன்படுத்துபவர்கள், குளியல் அறையின் உள்ளே சற்று உயரத்தில் சுவிட்ச் பாக்ஸை அமைக்கலாம். கம்பி கொண்டு தண்ணீர் சூடு செய்யும் கருவி, சலவை இயந்திரம் ஆகியவற்றை இணைப்பதற்கு குளியல் அறைக்கு வெளியே தரையில் இருந்து 4 அடி உயரத்தில் சுவிட்ச் பாக்ஸ்களை அமைக்கலாம்.

பூஜை அறை:

பூஜை அறையில் மின்விளக்கு சுவிட்சுடன் கூடிய ஒரே ஒரு மின் இணைப்பு கொண்ட சுவிட்ச் பாக்ஸ் அமைக்கலாம். அது பூஜை அறையின் கதவுக்குப் பக்கவாட்டில் இருப்பது நல்லது. பூஜை அறை தனியாக இல்லாமல், பூஜை அறைக்கு அலமாரி பயன்படுத்தும் வீடுகளில், அதற்கென தனியாக சுவிட்ச் பாக்ஸை அமைக்கத் தேவையில்லை.

திறந்த வெளியில் இருக்கக்கூடிய போர்டிகோ, பால்கனி, மொட்டை மாடி, முற்றம் மற்றும் வீட்டுத் தோட்டப் பகுதியில் சுவிட்ச் பாக்ஸ்கள் அமைப்பதை தவிர்ப்பது நல்லது.


Next Story