காய்ச்சலை குணமாக்கும் கஷாயம்


காய்ச்சலை குணமாக்கும் கஷாயம்
x
தினத்தந்தி 25 Sep 2022 1:30 AM GMT (Updated: 2022-09-25T07:01:02+05:30)

இன்றும் கிராமங்களில் பிரபலமாக இருக்கும், காய்ச்சலைப் போக்கும் கஷாயத்தைப் பற்றி பார்ப்போம்.

ல்லா பருவநிலையிலும் காய்ச்சல் வருவது இயல்பானதுதான். நம் முன்னோர்கள் காய்ச்சல் வராமல் தடுப்பதிலும், காய்ச்சலால் சிரமப்படுபவர்

களுக்கு கைவைத்தியங்களைச் செய்வதிலும் வல்லவர்களாக இருந்தனர். அந்தவகையில், இன்றும் கிராமங்களில் பிரபலமாக இருக்கும், காய்ச்சலைப் போக்கும் கஷாயத்தைப் பற்றி பார்ப்போம்.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே இதைக் குடிக்கலாம். அவரவரின் வயதுக்கேற்ப காரம் மற்றும் இனிப்புச் சுவையை கூட்டிக் குறைத்து, தயாரிக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்தக் கஷாயம் ஏற்றது. இதன் செய்முறை குறிப்பு இதோ…

தேவையான பொருட்கள்:

இஞ்சி - உள்ளங்கை அகலத் துண்டு

உலர் திராட்சை - அரை கைப்பிடி

சர்க்கரை - 3 டீஸ்பூன்

மிளகு - கால் டீஸ்பூன்

ஏலக்காய் - 2

தனியா - கால் டீஸ்பூன்

பட்டை - சிறு துண்டு

லவங்கம் - 2

செய்முறை:

இஞ்சியின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் உலர் திராட்சை, மிளகு, ஏலக்காய், தனியா, லவங்கம், பட்டை அனைத்தையும் சேர்த்து அம்மியில் வைத்து நன்றாக இடிக்கவும். பின்பு மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.

அடிகனமான, அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கலக்கிக் கொண்டே இருங்கள். சர்க்கரை கரைந்த உடன் அரைத்து வைத்த விழுதை அதில் கொட்டி லேசாக வதக்குங்கள். இப்போது அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். கலவை நன்றாகக் கொதித்து பாதியாக வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டுங்கள். இதை இளஞ்சூடாக இருக்கும்போது பருகுங்கள். இந்தக் கஷாயம் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாதது. அளவாக குடித்தால் நல்லது.

அளவு:

குழந்தைகளுக்கு 50 மில்லி வரை கொடுக்கலாம். பெரியவர்கள் பாதி டம்ளர் அளவு, நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை குடிக்கலாம். இதில் பால் சேர்க்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் அதிக இனிப்பு சேர்க்காமல் குடிக்கலாம். காரத்துக்கேற்ப மிளகைக் குறைத்தோ, கூட்டியோ பயன்படுத்தலாம்.

பயன்கள்:

தொண்டை கரகரப்பை குணமாக்கும். சளி கரைந்து வெளியேற உதவும். தொண்டைக்குள் சளி சுரப்பு கெட்டியாக இருந்தால் அதைக் கரைத்து வெளியேற்றும், இருமலை மட்டுப்படுத்தும். காய்ச்சல் நேரத்தில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால் வாய் கசப்பு குறையும்.


Next Story