''டாட்டூ'' போடும் முன் கவனிக்க வேண்டியவை


டாட்டூ போடும் முன் கவனிக்க வேண்டியவை
x
தினத்தந்தி 20 Aug 2023 1:30 AM GMT (Updated: 20 Aug 2023 1:30 AM GMT)

டாட்டூவில் உள்ள ரசாயனங்கள் தோலில் ஊடுருவி, ரத்தத்தில் கலந்து, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றும் ஆற்றல் கொண்டது. சிலருக்கு அதனால் "ஸ்ட்ரெப்டோமைசிஸ்" என்ற கிருமி உருவாகிறது.

ளைய தலைமுறையினர் மத்தியில் விதவிதமாக உடலில் டாட்டூ போட்டுக்கொள்ளும் வழக்கம் பேஷனாக மாறி வருகிறது. டாட்டூ என்ற நவீன பச்சை குத்தும் முறைக்கு ரசாயன மை வகைகளே பயன்படுத்தப்படுகின்றன. பச்சை குத்தும் வழக்கம் 1,000 ஆண்டுகளாக உலக நாடுகளில் அவரவர் கலாசாரத்திற்கேற்ப பின்பற்றப்படுகிறது.

முந்தைய காலங்களில் அகத்திக்கீரை மற்றும் மஞ்சள் பொடியை சேர்த்து துணியில் கட்டி, எரித்து கரியாக்கி, அதில் தண்ணீர் கலக்க அடர்ந்த பச்சை நிற மை கிடைக்கும். அதை கூர்மையான ஊசியால் தொட்டு, உடலில் பச்சை குத்திக் கொண்டனர். பின்னர், அந்த இடத்தை சுடுநீரால் சுத்தம் செய்தால் பச்சை குத்தப்பட்ட வடிவம் தெளிவாக காட்சியளிக்கும். இம்முறையில் பச்சை குத்திக்கொள்ளும்போது அது தோலின் மீது நிரந்தர அடையாளமாக மாறிவிடும்.

இக்காலத்தில் டாட்டூ வரைய ரசாயன சீன மை பயன்படுத்தப்படுகிறது. வேண்டிய நிறங்களைப் பெற அந்த மையில் குரோமிக் ஆக்சைடு, மெர்குரி, காட்மியம், இரும்பு ஆக்சைடு, ஆண்டிமனி, பெரிலியம், குரோமியம், நிக்கல், கோபால்ட், ஆர்சனிக் போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றால் பலருக்கும் தோலில் ஒவ்வாமை ஏற்படுகிறது.

டாட்டூவில் உள்ள ரசாயனங்கள் தோலில் ஊடுருவி, ரத்தத்தில் கலந்து, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றும் ஆற்றல் கொண்டது. சிலருக்கு அதனால் "ஸ்ட்ரெப்டோமைசிஸ்" என்ற கிருமி உருவாகிறது. எனவே, டாட்டூ போடுவதற்கு முன்னர் நம் உடலின் தன்மையை தெரிந்துகொண்டு, குறைவான ரசாயனங்கள் கொண்ட மை வகைகளைப் பயன்படுத்தலாம்.

டாட்டூ போட பயன்படும் கருப்பு மை குறைந்த பாதிப்பை கொண்டது. சிவப்பு உள்ளிட்ட இதர நிறங்கள் ஆபத்தானவை. ஏனென்றால் நிறத்திற்காக அவற்றில் நச்சுத்தன்மை கொண்ட இரும்பு ஆக்சைடு, காட்மியம் போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அவற்றை தவிர்ப்பதே சிறந்தது. டாட்டூ போட்டுக்கொள்ளும் முன்னர், ஊசியில் எவ்வகை மை நிரப்பப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

டாட்டூவில், தற்காலிகமானவை, நிரந்தரமானவை என இரு வகை உண்டு. தற்காலிகமானவை என்றால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அதனை அழித்துவிடலாம். தற்காலிக டாட்டூ போட விரும்புபவர்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களைத் தவிர்க்கவும். ஏனென்றால் அவற்றை லேசர் மூலம் சுலபமாக அகற்ற இயலாது. மற்ற நிறங்களை அகற்ற 8 முதல் 15 வாரங்கள் வரை ஆகலாம்.

தசைப்பிடிப்பாக உள்ள பகுதிகள், மேல் கை, காலின் பின் பகுதி, முதுகு ஆகிய பாகங்களில் டாட்டூ போடலாம். மணிக்கட்டு, முழங்கைகள், கால் ஆகிய பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். அப்பகுதிகளில் டாட்டூ போட்டால் புண்கள் ஆற நீண்ட காலம் ஆகலாம். தோலுக்கு பாதிப்பில்லாமல் வண்ணமயமாக டாட்டூ போட்டுக்கொள்ள இயற்கை நிறங்கள் மற்றும் வழிகளை கையாள்வதே சிறந்தது.


Next Story