மாணவர்களுக்கான சத்துணவு ஆலோசனைகள்


மாணவர்களுக்கான சத்துணவு ஆலோசனைகள்
x
தினத்தந்தி 13 Aug 2023 1:30 AM GMT (Updated: 13 Aug 2023 1:31 AM GMT)

மூளை, 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதுவே மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணமாகும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், மோர் ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

மாணவர்கள் கவனத்துடன் கல்வி கற்பதற்கும், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றி பெறுவதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முக்கியமானது. நினைவுத்திறன், புத்திக்கூர்மை, கவனம், சுறுசுறுப்பு ஆகியவை அதிகரிக்க சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதற்கான ஆலோசனைகள் இதோ...

மூளையின் செயல்திறனை அதிகரிப்பதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், போலிக் அமிலம், கால்சியம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. மீன் மற்றும் கடல் உணவுகள், கோழி இறைச்சி, முட்டை, குடைமிளகாய், கேரட், வெள்ளரிக்காய், வெந்தயக்கீரை போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் அதிகமாக உள்ளன.

மூளையில் புதிய செல்கள் உற்பத்தி ஆவதற்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும் அவசியமானவை. பருப்பு வகைகள், நிலக்கடலை, தேங்காய், பாதாம், வால்நட், சூரியகாந்தி விதை, மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மெக்னீசியம், காப்பர், அயோடின், இரும்புச்சத்து, செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் பி, சி போன்ற சத்துக்களும் தேவை. பீட்ரூட், குடைமிளகாய், பசலைக்கீரை, முருங்கைக்கீரை, சிவப்பரிசி, வாழைப்பழம், காலிபிளவர், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் அதிகமாக உள்ளன.

மூளை, 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதுவே மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணமாகும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், மோர் ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பாகற்காய், சுண்டைக்காய், கோவக்காய் போன்ற காய்கறிகள் மனநலத்தை மேம்படுத்தும். நாட்டுச்சர்க்கரை, கரும்புச்சாறு, டார்க் சாக்லேட் ஆகியவை மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவை:

உடல்சூடு மூளையை விரைவாக சோர்வடையச் செய்யும். எண்ணெய்யில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகள் மற்றும் பயறு வகைகளை தினமும் சாப்பிடலாம்.

பருவகாலத்திற்கு ஏற்ப விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

மாணவர்களுக்கான சத்துணவு பட்டியல்

காலை உணவு:

வேகவைத்த பயறு வகைகள், வேகவைத்த முட்டை அல்லது காய்கறிகள் கலந்த முட்டை ஆம்லெட், ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம், தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, முளைக்கட்டிய பயறு வகைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்த சாலட் ஆகியவற்றை காலை உணவாக சாப்பிடுவது நல்லது.

மதிய உணவு:

அரிசி சாதம், பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், மீன், முட்டை, இறைச்சி, தயிர் அல்லது மோர் போன்றவற்றை சாப்பிடலாம்.

மாலை சிற்றுண்டி:

ஆவியில் வேகவைத்த தின்பண்டங்கள், காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்த சாலட், உலர் பழங்கள் மற்றும் விதைகள் சேர்த்த கலவை, சத்துமாவு உருண்டை, யோகர்ட் போன்றவற்றை மாலை உணவாக சாப்பிடலாம்.

இரவு உணவு:

ஆவியில் வேகவைத்த உணவுகள் மற்றும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை அளவோடு சாப்பிடலாம்.


Next Story