மாற்றத்தை ஏற்படுத்தும் மாலினி


மாற்றத்தை ஏற்படுத்தும் மாலினி
x
தினத்தந்தி 23 July 2023 1:30 AM GMT (Updated: 23 July 2023 1:30 AM GMT)

உங்களுடைய குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்த உடன், உங்களை அதிர்ச்சியும், விரக்தியும் ஆட்கொள்வது இயல்புதான். ஆனால் உடனடியாக அதில் இருந்து வெளியே வந்து, அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். முதலில் நீங்கள் மனம் மற்றும் உடல்ரீதியாக தயாராக வேண்டும்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் மாலினி ராமகிருஷ்ணன். இவர் சமூக சேவகி, சிறப்பு கல்வியாளர், ஆட்டிசம் ஆலோசகர், நடத்தை-உணர்வு சார்ந்த சிகிச்சையாளர் போன்ற பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். கற்றல் குறைபாடு, செயல்திறன், புலன் உணர்வு, பயன்பாட்டு உளவியல் போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர் இவர். சிறப்பு ஒலிம்பிக் பெற்றோர் ஆலோசகர் விருது, சிறந்த பெண்மணி விருது, முயற்சியாளர் விருது என பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். இவரிடம் பேசியதில் இருந்து…

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் பயிற்சி மற்றும் சிகிச்சைகளைப் பற்றி சொல்லுங்கள்?

ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு விதமான குணநலன்கள், திறமைகள், செயல்பாடுகளைக் கொண்டவர்கள் என்பதால் அவர்களை நன்றாகப் பரிசோதித்து, அதன் அடிப்படையில் பயிற்சி அளிக்க வேண்டும். சில குழந்தைகள் பேச முடியாததால், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு 'புகைப்பட பரிமாற்று அமைப்பு' மூலமாக தங்களுடைய அத்தியாவசிய தேவைகளைப் பற்றி மற்றவர்களிடம் தெரிவிப்பதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.

என்னிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளில் பலர், தங்களுக்கு எழுதுவதற்கு விருப்பமில்லை என்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் எதில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒரு சிறுவனுக்கு படம் வரைவதில் விருப்பம் அதிகம் என்று தெரிந்து கொண்டேன். அதனால் பந்து, ரெயில், பேருந்து என ஒவ்வொன்றாக வரைந்து காட்டினேன். அவனும் ஆர்வத்துடன் அவற்றின் பெயர்களை சொல்லத் தொடங்கினான். பின்னர் அவற்றின் பெயர்களை எழுதுமாறு அவனிடம் கேட்டபோது உடனே எழுதிக் காட்டினான். இவ்வாறு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பம், திறமைகளைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் பயிற்சி அளிக்க வேண்டும்.

இத்தகைய குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனதில் நேர்மறை எண்ணங்களை விதையுங்கள். அவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும், அதை விமர்சனம் செய்யாமல் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள். நல்ல நடத்தை மற்றும் திறமைகளை அவர்கள் வெளிப்படுத்தும்போது பாராட்டுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட திறமைகள் இருக்கும். ஆகையால், உங்கள் குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். குழந்தைகள் எதற்காக கோபப்படுகிறார்கள், அதற்கான தூண்டுதல்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளின் தவறான நடத்தைக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைப் புரிந்து கொண்டால், அந்த தவறை மீண்டும் அவர்கள் செய்யாமல் திருத்த முடியும்.

ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

உங்களுடைய குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்த உடன், உங்களை அதிர்ச்சியும், விரக்தியும் ஆட்கொள்வது இயல்புதான். ஆனால் உடனடியாக அதில் இருந்து வெளியே வந்து, அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். முதலில் நீங்கள் மனம் மற்றும் உடல்ரீதியாக தயாராக வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் உதவியைப் பெறலாம். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை புறக்கணிக்காமல், அவர்களை புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


Next Story