திருப்பதி போன்று திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை கோவில்களில் விரைவில் பிரேக் தரிசனம்


திருப்பதி போன்று திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை கோவில்களில் விரைவில் பிரேக் தரிசனம்
x
தினத்தந்தி 10 July 2025 1:48 PM IST (Updated: 10 July 2025 1:51 PM IST)
t-max-icont-min-icon

பிரேக் தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.

சென்னை,

தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களாக விளங்கும் பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்கள் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழக பக்தர்களுடன் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்தவண்ணம் உள்ளதால் தரிசனம் செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. காத்திருப்பு நேரம் அதிகமாகி, சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்கவும், நீண்ட நேர காத்திருப்புக்கு விடை கொடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை 'பிரேக்' தரிசன முறையை (விரைவு தரிசனம்) கொண்டுவர உள்ளது. இதனால் பக்தர்களின் காத்திருப்பு நேரம் வெகுவாக குறையும்.

முதல்கட்டமாக பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்களிலும், திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலிலும் 'பிரேக்' தரிசன முறை கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக ஆன்லைன் மூலம் தரிசன தேதி, நேரத்தை பதிவு செய்யும் பக்தர்கள் கோவில்களில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக இறைவனை தரிசிக்க முடியும்.

இந்த 'பிரேக்' தரிசனம் என்பது கோவில்களில் தனி நுழைவு வாயில்கள் மூலம் குறுகிய காத்திருப்பு நேரத்துடன், முன்னுரிமை விரைவு தரிசனம் செய்வதாகும். 'பிரேக்' தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படும். பழனி கோவிலைப் பொறுத்தவரை, ரூ.300 கட்டணத்தில் பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

திருப்பதியில் இந்த பிரேக் தரிசன முறை நடைமுறையில் இருக்கிறது. அதே முறை இந்த 3 கோவில்களில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த கோவில்களை தொடர்ந்து ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

1 More update

Next Story