டி.கே. சிவக்குமாரா? சித்தராமையாவா? - கர்நாடக முதல்-மந்திரி யார்...? - பரபரப்படையும் அரசியல் களம்


டி.கே. சிவக்குமாரா? சித்தராமையாவா? - கர்நாடக முதல்-மந்திரி யார்...? - பரபரப்படையும் அரசியல் களம்
x
தினத்தந்தி 16 May 2023 12:36 PM GMT (Updated: 16 May 2023 2:41 PM GMT)

கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேவேளை, கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரி யார் என்பதில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழுக்கூட்டம் நேற்று முன் தினம் கூடி முதல்-மந்திரி யார் என்ற இறுதி முடிவை கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேவேளை, கட்சி தலைமையை சந்திக்க கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று டெல்லி சென்றார். மேலும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இன்று டெல்லி சென்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டிகே சிவக்குமார் சந்தித்தார். முதல்-மந்திரி பதவி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். டிகே சிவக்குமாருடனான ஆலோசனைக்கு பின் சித்தராமையாவை கார்கே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதேவேளை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோர் சித்தராமையாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, சோனியாகாந்தி டிகே சிவக்குமாருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மல்லிகார்ஜூன கார்கே இறுதி முடிவு எடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

டிகே சிவக்குமார், சித்தராமைய்யா ஆகிய 2 பேரில் ஒருவரை முதல்-மந்திரியாக தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கட்சி தலைமை வழங்கியுள்ளது. மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கர்நாடக பொறுப்பாளருமான ரந்தீப் சுர்ஜிவாலா இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், ராகுல்காந்தியும் கர்நாடக முதல்-மந்திரியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது கர்நாடக பொறுப்பாளருமான ரந்தீப் சுர்ஜிவாலாவும் உடன் இருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிகே சிவக்குமாரும், சித்தராமையாவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாக கர்நாடக முதல்-மந்திரி யார்? என்பது குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story