நூதன முறையில் தங்க மோதிரம் மோசடி; டெல்லியில் 4 பேர் கைது


நூதன முறையில் தங்க மோதிரம் மோசடி; டெல்லியில் 4 பேர் கைது
x

டெல்லியில் சாதுக்கள் போல் நடித்து நபரிடம் தங்க மோதிரம் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரை சேர்ந்தவர் ககன் ஜெயின். பட்டய கணக்காளரான இவர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றார். அப்போது ஓட்டல் அருகே 4 பேர் அவரை அணுகினார்கள்.

சாதுக்கள் போல் உடையணிந்து, உடல் முழுவதும் சாம்பல் பூசியும், கால்களில் மணிகளை கட்டியபடியும் காணப்பட்ட அவர்கள், நாங்கள் வேதத்தில் புலமை பெற்றவர்கள் என்று கூறி ஜெயினின் நெற்றியில் பொட்டு வைக்கிறோம் என கூறினார்கள். ஆனால், அவர் அதற்கு மறுத்து விட்டார். உடனே அவர்கள், கங்கை மாயா மற்றும் மகாதேவர் மீது நம்பிக்கை வையுங்கள் என கூறி கட்டாயப்படுத்தி அவரை சம்மதிக்க வைத்தனர்.

அவர்கள் தொடர்ந்து, உங்களுடைய தங்க மோதிரம் பாதிக்கப்பட்டு உள்ளது. துரதிர்ஷ்டம் உங்களை விட்டு போக வேண்டும் என்றால் அதனை கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார். இதனால், பயந்து போன அவர், அதனை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அவர்கள் பதிலுக்கு, திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும். இல்லையெனில் பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என எச்சரித்தனர். அப்போது, தன்னை மோசடி செய்து விட்டார்கள் என்றுணர்ந்த ஜெயின், சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீசார் மஹிபால்பூரில் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், அரித்துவாரில் உள்ள பக்தர்கள், சாமியார்களிடம் ஆசி பெறுவதற்காக தங்களிடம் இருந்த பணம் மற்றும் விலைமதிப்பில்லா பொருட்களை வழங்கினர்.

இதனை கவனித்ததும் நாங்கள் இந்த திட்டம் போட்டோம். இதன்படி, சாதுக்கள் போல் ஆடை அணிந்து கொண்டு சந்தேகப்படாத தனிநபர்களை இலக்காக வைத்து செயல்பட்டோம் என்றனர். அவர்களிடம் இருந்து ஜெயினின் தங்க மோதிரம் கைப்பற்றப்பட்டது. வேறு ஏதேனும் வழக்குகளுடன் அவர்களுக்கு தொடர்பு உண்டா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story