காசா, ஈரான் மீதான தாக்குதல்; இந்திய அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் - சோனியா காந்தி

ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் ஈரான் உறுதியான ஆதரவை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காசா மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இந்த விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பது நமது மதிப்புகளை இழப்பது போன்றதாகும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மீக மற்றும் ராஜதந்திர வழக்கங்களை விட்டு விலகுவதற்கு சமமாகும். இது நமது குரல் மட்டுமின்றி, நமது மதிப்புகளையும் இழப்பதைப் போன்றதாகும்.
இத்தகைய மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ள சூழலில், இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தில் 'இரு-நாடு' தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டை நரேந்திர மோடி அரசாங்கம் கைவிட்டுவிட்டது.
இனிமேலும் தாமதிக்காமல் இந்தியா தெளிவாக தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மேற்கு ஆசியாவில் பதற்றத்தை தணித்து, பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்.
ஜூன் 13, 2025 அன்று, ஈரான் மற்றும் அதன் இறையாண்மைக்கு எதிராக இஸ்ரேல் சட்டவிரோதமான தாக்குதலை தொடங்கியபோது, ஒருதலைப்பட்ச ராணுவ தாக்குதலின் ஆபத்தான விளைவுகளை உலகம் மீண்டும் ஒருமுறை கண்டது. இது பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஈரானில் நடந்த இந்த குண்டுவெடிப்புகளையும், படுகொலைகளையும் இந்திய தேசிய காங்கிரஸ் கண்டித்துள்ளது.
பொதுமக்களின் உயிர்கள் மற்றும் பிராந்திய அமைதியை முற்றிலும் புறக்கணித்து காசா மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களைப் போலவே, ஈரான் மீதான தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு அமைதியை சீர்குலைப்பதிலும், பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும் நீண்ட வரலாற்று பதிவைக் கொண்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. உண்மைகளை அடிப்படையாக கொண்ட, ராஜதந்திரத்தால் இயக்கப்படும் தலைமையை உலகம் எதிர்பார்க்கிறதே தவிர, வற்புறுத்தல் அல்லது பொய்களால் நிரம்பிய தலைமையை அல்ல.
ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் ஈரான் உறுதியான ஆதரவை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. 1994-ம் ஆண்டு, காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவை விமர்சிக்கும் தீர்மானத்தைத் தடுக்க ஈரான் உதவியது. முன்னதாக 1965 மற்றும் 1971 போர்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த ஈரான் ஏகாதிபத்திய அரசை விட, தற்போதைய ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்தியாவுடன் நன்றாக ஒத்துழைத்து வருகிறது.
இந்தியா-இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உறவு, போர் பதற்றத்தை தணித்து, அமைதிக்கு வழிவகை செய்ய உதவும் தார்மீக பொறுப்பை நமக்கு வழங்குகிறது. இது சாதாரண கொள்கை மட்டுமல்ல. லட்சக்கணக்கான இந்திய குடிமக்கள் மேற்கு ஆசியா முழுவதும் வேலை செய்கிறார்கள். எனவே அந்த பிராந்தியத்தில் அமைதி நிலவுவது நமது தேச நலன் சார்ந்த விஷயமாக உள்ளது."
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.






