ரத்தத்தால் கடிதம்... தொடர் குறுந்தகவல்... போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு காதல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் பெண் பிரமுகர்

சஞ்சனாவுக்கும், இன்ஸ்பெக்டர் சதீசுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சதீஸ். அதே ராமமூர்த்திநகரில் வசித்து வருபவர் சஞ்சனா என்ற வனஜா(வயது 38). இவர், காங்கிரஸ் பிரமுகர் ஆவார். சமீபத்தில் சஞ்சனாவுக்கும், இன்ஸ்பெக்டர் சதீசுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது.
அப்போது உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களை காதலிக்கிறேன், நீங்களும் என்னை காதலிக்க வேண்டும் என்று போனில் சஞ்சனா கூறியுள்ளார். முதலில் யாரோ தன்னிடம் விளையாடுவதாக நினைத்து இன்ஸ்பெக்டர் சதீசும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். அதன்பிறகு, அதே செல்போனில் இருந்து அழைப்பு வந்ததால், அவர் பதிலளிக்காமல் தவிர்த்து வந்தார்.
அதையடுத்து வெவ்வேறு எண்களில் இருந்து சதீசை தொடர்பு கொண்ட சஞ்சனா, அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு 11 செல்போன் எண்களில் இருந்து இன்ஸ்பெக்டர் சதீசை தொடர்பு கொண்டு தன்னை காதலிக்கும்படி சஞ்சனா தொல்லை கொடுத்துள்ளார். அதன்பிறகு, ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்திற்கே இன்ஸ்பெக்டர் சதீசுக்கு பூச்செண்டை சஞ்சனா அனுப்பினார்.
மேலும் செல்போனில் குறுந்தகவல், வாட்ஸ்-அப் மூலமும் தன்னை காதலிக்கும்படி சதீசுக்கு சஞ்சனா தொல்லை கொடுத்துள்ளார். மந்திரி லட்சுமி ஹெப்பால்கருடன் சஞ்சனா இருக்கும் புகைப்படத்தை அனுப்பியும், தனக்கு முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரை நன்கு தெரியும் என்றும், அதனால் தன்னை காதலிக்கும்படியும் இன்ஸ்பெக்டர் சதீசுக்கு தொல்லை கொடுத்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் சதீசை சந்தித்து காதல் கடிதம் கொடுத்ததுடன், தன்னை காதலிக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் சஞ்சனா மிரட்டல் விடுத்தார். அவர் எழுதிய கடிதம் ரத்தத்தால் எழுதி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சஞ்சனாவின் தொல்லை அதிகரித்ததாலும், தற்கொலை மிரட்டல் விடுத்ததாலும் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சதீஸ், அதே ராமமூர்த்திநகர் போலீசில் சஞ்சனா மீது புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து தொல்லை கொடுத்தல் மற்றும் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி சஞ்சனா மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீசிடம் கேட்ட போது, எனக்கு காதல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. அவர் தனது கணவரை பிரிந்து விட்டார். விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். எனக்கு எதற்காக காதல் தொல்லை கொடுத்தார்? என்பது தெரியவில்லை. எனக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்’, என்றார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






