டிஜிபி நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
தமிழக டி.ஜி.பி. ஆக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு முழு நேர டி.ஜி.பி. ஆக யாரும் தேர்வு செய்யப்படாததால் சட்டம் ஒழுங்கு பிரிவு பொறுப்பு டி.ஜி.பி.-யாகவும் மாநில காவல் படைத்தலைவராகவும் டி.ஜி.பி. நிலையிலான ஐபிஎஸ் உயர் அதிகாரி ஜி. வெங்கட்ராமனை தமிழக அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தற்காலிகமாக நியமித்தது.
இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு புதிய காவல்துறை டிஜிபி நியமனம் செய்யாமல் பொறுப்பு டி.ஜி.பி நியமித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஹென்றி திபேன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, காவல்துறை இயக்குனரை விரைந்து நியமிக்க உத்தரவிட்டது. குறிப்பாக யுபிஎஸ்சி பரிந்துரை கிடைத்தவுடன் உடனடியாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ’காவல்துறை டிஜிபி பெயரை இறுதி செய்து யுபிஎஸ்சி, தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய நிலையில் புதிய டிஜிபி நியமனம் செய்யப்படாமல் உள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறிய தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவமதிப்பு மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.






