மாணவிகளை நிர்வாணப்படுத்தி கொடூரம்.. பள்ளி முதல்வர் உள்பட 5 பேர் கைது

மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய விவகாரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
மும்பை,
தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் ஆர்.எஸ். தமானி என்ற தனியார் பள்ளி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
கழிவறையை ரத்தக்கறையாக்கிய மாணவியை கண்டறிய பள்ளி ஆசிரியைகள் விசித்திர செயலை அரங்கேற்றினர். அதன்படி மாதவிடாய் இருப்பதாகக் கூறிய மாணவிகளின் இடது கை ரேகையை பதிவு செய்தனர். அதே நேரத்தில் மாதவிடாய் இல்லை எனக்கூறிய மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தி உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர். பள்ளியில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தை கேட்டு கொந்தளித்த பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளியின் முதல்வர், பெண் ஊழியர், ஆசிரியைகள் 4 பேர் உள்பட 8 பேர் மீது போக்சோ, மானபங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு தரப்பினர் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தானே தனியார் பள்ளியில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்திய விவகாரத்தில் போலீசார், பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட் மற்றும் பெண் ஊழியர் நந்தாவை அதிரடியாக கைது செய்தனர். இதேபோல மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி முதல்வர் உத்தரவின் பேரில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு தானே மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.






