நீட் தேர்வில் நிராகரிப்பு.. ரூ.72 லட்சத்தில் பிரபல நிறுவனத்தில் வேலை.. கல்லூரி மாணவியின் சாதனை

ஆரம்பத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து ஏமாற்றமான பதிலே ரிதுபர்ணாவிற்கு வந்தது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூரில் சுரேஷ் மற்றும் கீதா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களது மூத்த மகளான ரிதுபர்ணாவிற்கு(20) சிறுவயதிலிருந்தே டாக்டராக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் அவர் நிராகரிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் சோர்ந்து போகாத அவர் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் பொறியியல் படிப்பில் தயக்கம் காட்டிய ரிதுபர்ணா தனது பாடப்பிரிவில் அதீத ஆர்வம் காட்டியுள்ளார்.
ரோபோடிக்ஸ் மூலம் பாக்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதே அவரது முதல் திட்டம். ஒரு குழு உடன் சேர்ந்து கோவா ஐஎன்இஎக்ஸ் போட்டியில் அறுவடை இயந்திரம் மற்றும் தெளிப்பான் மாதிரியை வழங்கி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இதை அடுத்து உலகப் புகழ் பெற்ற பிரபல நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும் என்று விரும்பிய அவருக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது. எங்கள் நிறுவனத்தில் ஒரு பகுதியாக இருக்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று அவர்கள் கேட்டபோது ஏதாவது ஒரு பணியை கொடுக்குமாறு அதை முடிப்பதில் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்நிறுவனம் ஒரு சிறு பகுதி வேலையை அவருக்கு கொடுத்தனர். முதலில் அவருக்கு புரியவில்லை என்றாலும் ரிதுபர்ணா தனது தீவிர முயற்சி மற்றும் ஆராய்ச்சி மூலம் அதனை முடித்துள்ளார். தொடர்ந்து 8 மாதங்கள் எண்ணற்ற சவால்கள் மற்றும் கடினமான நேர்காணல்களை எதிர்கொண்டார். அதன் பின் கடந்த ஜனவரி மாதம் முதல் ரோல் ராய்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்றார்.
அதன் பிறகு கல்லூரி வகுப்புகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்த தீவிர முயற்சியை தொடர்ந்து அவருக்கு அந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூபாய் 72.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. பொறியியல் படிப்பின் இறுதி செமஸ்டர் முடித்ததும் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் டெக்ஸாஸ் பிரிவில் அவர் பணியில் சேர உள்ளார். முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதைபோல இன்றைய இளைஞர்கள் மனம் தளராமல் என்னை போல தங்கள் துறையில் எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார்.






