சபரிமலையில் மகரவிளக்கு பூஜை: அடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு நிறைவு


சபரிமலையில் மகரவிளக்கு பூஜை: அடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு நிறைவு
x

மண்டல பூஜைக்கு 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போலவே ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு மூலம் அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் சீசனின் தொடக்கத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பேரும் தினமும் சென்றனர்.

சீசனின் தொடக்கத்திலேயே சபரிமலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பக்தர் பலியானார்.

இதனை தொடர்ந்து கூட்ட நெரிசலை தவிர்க்க சபரிமலை விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டது. உடனடி தரிசனத்துக்கான முன்பதிவு எண்ணிக்கையை குறைக்கலாமே என அறிவுறுத்தியது. அதன்படி உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் குறைத்தது. அதாவது 20 ஆயிரம் பக்தர்கள் சென்ற நிலையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே செல்லலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் வராத பட்சத்தில் உடனடி தரிசன முன்பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், தினமும் அய்யப்பனை தரிசிக்க சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

மண்டல பூஜைக்கான முன்பதிவு

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜை அன்றும், அதற்கு முந்தைய நாளும் இதுவரை ஆன்லைன் முன்பதிவை தொடங்காமல் திருவிதாங்கூர் தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது. இந்தநிலையில் தற்போது அதற்கான முன்பதிவும் நேற்று மாலை தொடங்கியது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், "மண்டல பூஜையையொட்டி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். மண்டல பூஜைக்கு முந்தைய நாளான 26-ந் தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் 30 ஆயிரம் பக்தர்களும், மண்டல பூஜை தினமான 27-ந் தேதி 35 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 2 நாட்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மகரவிளக்கு பூஜை ஆன்லைன் முன்பதிவு நிறைவு

மண்டல, மகர விளக்கு சீசன் காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவொரு முன்பதிவும் இன்றி நேரடியாக வந்து பக்தர்கள் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

தற்போது கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சீசனில் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவை நாடுவதில் ஆர்வம் காட்டினர். எனவே சீசனில் தொடக்கத்திலேயே பெரும்பாலான நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்தது.

மண்டல பூஜைக்கு பிறகு நடைபெற உள்ள மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை முன்பதிவு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story