பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி


பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 4 Nov 2025 1:04 PM IST (Updated: 4 Nov 2025 1:54 PM IST)
t-max-icont-min-icon

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

புதுடெல்லி,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளதாக கூறி இருந்தார்.

அண்ணாமலை இப்படி பேசியதை வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்று பேட்டி அளித்ததாகவும், ஆனால் அந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஆதாரங்களை வழங்கவில்லை. எனவே இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என மகளிர் சிறப்பு கோர்ட்டு அறிவித்துள்ள நிலையில், அவர் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அனைத்து ஆதாரங்களையும் பெற்று விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதுதொடர்பாக நீதிபதி, நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது. இதுபோன்று அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு கோர்ட்டு பதிலளிக்க வேண்டுமா? இப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் தினமும் 100 வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டி வரும். இதற்காக நேரத்தை வீணாக்க வேண்டாம். ஞானசேகரன் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில் மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது, மனுதாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்வி எழுப்பிய சுப்ரீம்கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 More update

Next Story