2-ம் கட்ட தேர்தல்: பீகாரில் 122 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

பீகார் சட்டசபை தேர்தலுக்கான தீவிர பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
பாட்னா,
பீகார் சட்டசபையின் பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் கடந்த 6-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பீகாரில் மொத்த சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 243 ஆகும். அவற்றில் 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
பீகார் வரலாற்றிலேயே இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) 2-ம்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் நடந்து வந்தது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது.
ஆட்சியை தக்கவைக்கும் நோக்கத்துடன் பா.ஜனதா கூட்டணி தலைவர்களும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் இந்தியா கூட்டணி தலைவர்களும் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பீகாரில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 122 தொகுதிகள் 20 மாவட்டங்களில் அடங்கி உள்ளன. அங்கு மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 1,165 பேர் ஆண்கள், 136 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1 கோடியே 95 லட்சம்பேர் ஆண்கள், 1 கோடியே 74 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.
மொத்தம் 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்போது, பீகாரில் அடுத்து ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று தெரிய வரும்.






