அதி கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை

கோப்புப்படம்
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் புதுவையில் நேற்று காலை முதல் இதமான சூழல் நிலவியது. நேற்று மதியம் 3 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. பின்னர் மாலை 5 மணிக்கு மேல் மிதமான மழை பெய்தது. இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி செல்வதை காண முடிந்தது.
இந்நிலையில் கன மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென் தமிழக கடலோர பகுதிகளில் மன்னார்வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூறைக்காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசும். அவ்வப்போது 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே புதுச்சேரியில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். கடல் சீற்றம் ஏற்படும் நேரங்களில் தங்கள் படகுகள், மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், மழை தொடர்பான புகார்களை 1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற எண்ணில் வாட்சப் தகவல் வழியாக தெரிவிக்கலாம் என்றும் புதுச்சேரி கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.






