வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு இன்று செல்கிறார் ராகுல் காந்தி


வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு இன்று செல்கிறார் ராகுல் காந்தி
x
தினத்தந்தி 4 Dec 2024 9:56 AM IST (Updated: 4 Dec 2024 10:17 AM IST)
t-max-icont-min-icon

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சம்பல் மாவட்டத்திற்கு இன்று செல்கிறார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாடு தலம் இதற்கு முன் இந்து மத கடவுள் ஹரிஹரின் வழிபாட்டு தலமாக இருந்ததாகவும் இது குறித்து ஆராய வேண்டுமென கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் ஆய்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதேபோல், கடந்த மாதம் 24ம் தேதி அதிகாரிகள் 2வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தனர்.

அப்போது, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் நகருக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று செல்கிறார். அவர் வன்முறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார்.

அதேவேளை, வன்முறை நடைபெற்ற சம்பல் மாவட்டத்திற்குள் வெளிநபர்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி ராகுல் காந்தி சம்பல் மாவட்டத்திற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி மற்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரும் சம்பல் மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், ராகுல் காந்தியை தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story