திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த காதல் ஜோடி.. திடீரென எடுத்த விபரீத முடிவு.. காரணம் என்ன..?


திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த காதல் ஜோடி.. திடீரென எடுத்த விபரீத முடிவு.. காரணம் என்ன..?
x

ராகேஷ் மற்றும் சீமா இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனேக்கல்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா ஜிகினி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ் பாத்ரா (வயது 23). இவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் ஒடிசாவை சேர்ந்த சீமா நாயக் (21) என்பவர் தொழிலாளியாக வேலை செய்தார். 2 பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

அந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் ஜிகினி அருகே கல்லுபாலு கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் தங்கினர். ராகேஷ் மற்றும் சீமா திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்கள் மத்தியில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில், நேற்று முன்தினத்தில் இருந்து ராகேஷ் வசித்து வந்த வாடகை வீடு திறக்கப்படாமல் இருந்தது.

நேற்று காலையில் ராகேஷ் செல்போனுக்கு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அழைத்த போது, அவர் எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்க்கையில் சீமா தூக்கில் பிணமாக தொங்கினார். ராகேசும் பிணமாக கிடந்தார். இதுபற்றி உடனடியாக ஜிகினி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராகேஷ், சீமா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது கடந்த 19-ந் தேதி நள்ளிரவு சீமா தூங்கிய பின்பு ராகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலையில் எழுந்த சீமா, காதலன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ராகேஷ் தூக்கில் தொங்கிய துணியை வெட்டி உடலை கீழே இறக்கியுள்ளார். காதலன் உயிரிழந்திருப்பது தெரிந்ததும், சீமாவும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்தது தெரியவந்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அந்த வீட்டுக்கு 2 பேரும் வாடகைக்கு வந்துள்ளனர். ராகேசுக்கும், சீமாவுக்கும் இடையே அடிக்கடி பணப்பிரச்சினையால் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 19-ந் தேதி இரவும் ராகேஷ் மது குடிக்க பணம் கேட்டதாகவும், இந்த விவகாரத்தில் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களது தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story