உடுக்கை சத்தம் கேட்டு அம்மன் கோவில் நடை தானாக திறந்த அதிசயம்.. பக்தர்கள் பக்தி பரவசம்

உடுக்கை சத்தம் கேட்டு தேவிரம்மன் கோவில் நடை தானாக திறந்த அதிசயம் நடந்தது.
சிக்கமகளூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே உள்ள பிண்டுகா கிராமத்தில் தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலின் பின்புறம் உள்ள மலையில், கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் தேவிரம்மன் சிலை அமைந்திருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தேவிரம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி தீப திருவிழா கொண்டாடப்படும்.
அதன்பிறகு கோவில் நடை சாத்தப்படும். இந்த சந்தர்ப்பத்தில் வேத, மந்திரங்கள் முழங்க உடுக்கை அடிப்பார்கள். அப்போது கோவில் நடை தானாக திறக்கும். இந்த கண்கொள்ளா காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.
அதுமட்டுமின்றி இந்த கோவிலில் நடக்கும் தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மலையின் உச்சியில் உள்ள அம்மனை தரிசிக்க மலை மீது ஏறி செல்வார்கள். ஆனால் எளிதில் பக்தர்களுக்கு மலை மீதுள்ள கோவிலுக்கு செல்ல அனுமதி கிடைக்காது. இருப்பினும் இந்த ஆண்டு 2 நாட்கள், அதாவது கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் மலை உச்சியில் உள்ள அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பேரில் அந்த 2 நாட்களில் பக்தர்கள் பயபக்தியுடன் மலை உச்சிக்கு ஏறிச்சென்று அம்மனை தரிசித்தார்கள். இதற்காக பக்தர்கள் கரடுமுரடான பாதைகளில் நடந்து சென்றார்கள். சில இடங்களில் தொடர் மழை காரணமாக அபாயகரமாக காட்சி அளித்தது. அங்கு பக்தர்கள் கயிற்றை பிடித்து ஏறி செல்ல வழிவகை செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அந்த பகுதிகளில் கயிற்றைப்பிடித்து மலை மீது ஏறி மக்கள் உற்சாகம் அடைந்தார்கள்.
கடந்த 2 நாட்களில் மட்டும் மலை மீது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், 3 பேர் மலை மீது ஏற முடியாமல் மயக்கம் அடைந்தார்கள். உடனே அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மேலும், ஒருவருக்கு கீழே விழுந்து கால் முறிந்தது. அவரையும் மீட்பு படையினர் மீட்டனர். இந்த கோவில் தீப திருவிழாவின்போது கோவில் நடை சாத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பம்பை உடுக்கை அடிக்கப்படும். அப்போது கோவில் நடை தானாக திறக்கும் என்பது ஐதீகம். அந்த நிகழ்வு நேற்று கோவிலில் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, நடை சாத்தப்பட்டது. பின்னர் பம்பை உடுக்கை அடிக்கப்பட்டது. அதையடுத்து கோவில் நடை தானாக திறக்கப்பட்டது. விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளித்தாள். இதை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதையடுத்து மாலையில் தேவிரம்மனின் பல்லக்கு ஊர்வலமும் நடந்தது. இந்நிலையில் இன்று(புதன்கிழமை) தீமிதி திருவிழா நடக்க இருக்கிறது. இதில் அம்மனை வேண்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.






