பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 May 2025 3:09 PM IST
விஜய் சேதுபதி, ருக்மிணி வசந்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் வரும் 23-ந்தேதி திரைக்கு வரும் ஏஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
- 11 May 2025 2:57 PM IST
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பிரம்மோஸ் விமான தளம் ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை மையத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை காணொலி காட்சி வழியே திறந்து வைத்த மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, இன்று தேசிய தொழில்நுட்ப தினம் ஆகும்.
1998-ம் ஆண்டு இதே நாளில், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின் கீழ் நம்முடைய விஞ்ஞானிகள் பொக்ரானில் அணுஆயுத பரிசோதனையை நடத்தினார்கள். இதில், இந்தியாவின் பலம் உலகிற்கு எடுத்து காட்டப்பட்டது.
நம்முடைய விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பலருடைய ஆழ்ந்த முயற்சிகளின் விளைவால் அந்த பரிசோதனை நடத்தப்பட்டது என கூறியுள்ளார்.
- 11 May 2025 2:37 PM IST
சென்னை வளசரவாக்கத்தில் தீ விபத்து; முதிய தம்பதி பலி
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வயது முதிர்ந்த தம்பதி பலியாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, 3 வாகனங்களில் சென்ற 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
- 11 May 2025 1:20 PM IST
நாளை ஊட்டி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
5 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) ஊட்டி செல்கிறார். அங்கு 15-ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மேலும் பட்டா வழங்கும் விழா, பழங்குடியின மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.
- 11 May 2025 12:51 PM IST
பிரதமர் மோடிக்கு அதிமுக பாராட்டு
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில்,
தன்னுடைய அரசியல் அனுபவத்தாலும், ராஜ தந்திரத்தாலும் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடைபோட்டுள்ள பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் வணக்கம், பாராட்டு, நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
- 11 May 2025 12:34 PM IST
ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை - அரசு பெருமிதம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32.23 இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021-ல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்கு உயர்ந்து சாதனை படைத்தது.
மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் மராட்டியம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களைவிட அதிகமாக 14.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது தமிழ்நாடு.
- 11 May 2025 11:59 AM IST
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. பினாமி சொத்துகள் தடைச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை விசாரணை நடத்த நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
- 11 May 2025 11:55 AM IST
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது பாலம்மாள்புரத்தில் இருந்து வேப்பிலை, மஞ்சள் மற்றும் குங்குமத்தில் அலங்கரிக்கப்பட்ட கம்பம், 2 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து வரப்பட்டு கோவில் அறங்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கம்பம் நடும் விழாவுடன் வைகாசி பெருவிழா தொடங்கியது
- 11 May 2025 11:49 AM IST
பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த டாக்டர் பரமேஸ்வரனிடம் நலம் விசாரிப்பு
பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரனை சந்தித்து தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் நலம் விசாரித்தார். உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.















