பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி பீட் ஹெக்சேத் உடன் இன்று உரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்காவின் பாதுகாப்பு துறை மந்திரி பீட் ஹெக்சேத் உடன் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவருடனான உரையாடலை பற்றி தன்னுடைய எக்ஸ் தளத்தில் மத்திய மந்திரி சிங் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி பீட் ஹெக்சேத் உடன் இன்று உரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை இன்னும் ஆழப்படுத்தும் வகையிலும் மற்றும் திறன் கட்டமைப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நடந்து வரும் மற்றும் புதிய திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான ஆலோசனையும் சிறந்த முறையில் நடந்தது என பதிவிட்டு உள்ளார்.
தொடர்ந்து அதில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஈடுஇணையற்ற ஆதரவை வழங்கி வருவதற்காக, என்னுடைய ஆழ்ந்த பாராட்டுகளையும் நான் தெரிவித்து கொண்டேன். அவரை விரைவில் சந்திக்க ஆவலாக காத்திருக்கிறேன் என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.






