மின்சாரம் தாக்கி பெண்கள் உள்பட 4 பேர் காயம்


மின்சாரம் தாக்கி பெண்கள் உள்பட 4  பேர் காயம்
x

காலாப்பட்டு அருகே சூறைக்காற்றில் அறுந்து விழுந்த வயரால் மின்சாரம் தாக்கி பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

காலாப்பட்டு

புதுவை அடுத்த சேதராப்பட்டு பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இந்த சூறைக்காற்றால் கரசூர் கிராமத்தில் வீட்டு இணைப்புக்கான மின் கம்பத்தில் உள்ள மின்சார வயர் குப்புசாமி என்பவரின் வீட்டு எதிரே அறுந்து விழுந்தது. இந்நிலையில் அவரது வீட்டுக்கு எதிரே வசிக்கும் மணியின் மனைவி தனம் (வயது 45) அதிகாலையில் துணியை துவைத்து மின்கம்பம் அருகே கட்டப்பட்டிருந்த கொடியில் காய வைக்க சென்றார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார். அதனைப் பார்த்த அவரது மகள் பிரியதர்ஷினி (19), தாயை காப்பாற்ற முயற்சிக்கும் போது அவரும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து பக்கத்து வீட்டை சேர்ந்த உறவுக்காரர் குமார் மற்றும் காந்த லட்சுமி ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது அவர்களும் மின் வயைர மிதித்ததால் மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் சேதராப்பட்டு போலீசாருக்கும், மின் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். மின் ஊழியர்கள் விரைந்து வந்து கரசூருக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர். மின்சாரம் தாக்கி காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story