மாணவர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை


மாணவர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை
x

புதுவையில் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

முப்பெரும் விழா

புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் மேட்டுப்பாளையம் விடுதலை வீரர் சீனுவாசன் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேயர் ராமலிங்க கவுண்டர் அரசு தொடங்கப்பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம், புதிய பெயர்பலகை மற்றும் சிலைகள் திறப்பு ஆகிய முப்பெரும் விழா இன்று மாலை பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிடம், சிலையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஊக்கத்தொகை

சிறிய மாநிலமான புதுவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இதனால் ஏழை மாணவர்கள் எளிதாக இலவச கல்வி பயில முடிகிறது. புதுவை அரசு தற்போது புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்துமா? என்று சிலர் கேட்கின்றனர். இந்த அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக செயல்படுத்தும். மாணவர்களுக்கான திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

நமது பள்ளி மாணவர்கள் விளையாட்டிலும் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் புதுச்சேரி மாணவர்கள் தங்க பதக்கம் பெற்றுள்ளனர். சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நமச்சிவாயம்

விழாவில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், இந்த அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களின் பெயரில் உள்ள பள்ளிகளில் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த 2 பள்ளிகளில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மற்ற பள்ளிகளிலும் சிலைகள் வைக்கப்படும் என்றார்.

பரிசு

விழாவில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். விழாவில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கி கவுரவித்தார்.


Next Story