சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்.. தமிழக அரசு சார்பில் அனுப்பப்படுகிறது


சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்..  தமிழக அரசு சார்பில் அனுப்பப்படுகிறது
x

திருவாங்கூர் தேவஸ்தானம் 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கேட்டுள்ளதாகவும், அதனை 14-ந்தேதி அனுப்ப உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சார்பில் புதிய நர்சிங் கல்லூரி அமையவுள்ள இடத்தினை அமைச்சர் சேகர்பாபு நேற்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், “நர்சிங் கல்லூரியை தற்காலிகமாக தொடங்கி, 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். டாக்டர்.நாராயணபாபுவை பொறுப்பு அலுவலராக நியமித்துள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லாமல் 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளோம். காஞ்சீபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு டிசம்பர் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் எங்களிடம் 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கேட்டு இருக்கிறார்கள். அதை ஏற்பாடு செய்து, முதற்கட்டமாக 14-ந்தேதி பிஸ்கெட் பாக்கெட்டுகளை அனுப்ப உள்ளோம். பக்தர்களுக்கு 24 மணிநேரமும் உதவிடும் வகையில் சபரிமலையில் ஒரு அலுவலகத்தை எற்படுத்த உள்ளோம்.

மேலும் அப்பல்லோ, காவிரி, ராமச்சந்திரா ஆஸ்பத்திரிகள் மூலம் அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவ மையத்தை ஏற்படுத்துவதற்கு தேவஸ்தானத்திடம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைக்கும் நிலையில் போதிய டாக்டர்களுடன் தற்காலிக மருத்துவ மையம் அமைக்கப்படும்.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பஸ்களை இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேரள அரசின் துணையோடு தமிழக அரசு மேற்கொள்ளும்” என்று அவர் கூறினார்.

1 More update

Next Story