திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
x

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நித்தியா தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தருவை பனங்காட்டு அருகே சந்தேகப்படும் வகையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மேலமுன்னீர்பள்ளம், முத்துநகரை சேர்ந்த மகேஷ்வரன் (வயது 35), தருவை, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லெட்சுமணன்(25), மேலமுன்னீர்பள்ளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பண்டாரம்(20) ஆகிய 3 பேரையும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 120 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அவர்கள் 3 பேரையும் முன்னீர்பள்ளம் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 3 பேரையும் நேற்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 120 கிராம் கஞ்சா, ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.

1 More update

Next Story