கூட்டுக் கொள்ளை வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை


கூட்டுக் கொள்ளை வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
x

திருநெல்வேலி கீழநத்தம், வெள்ளிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த வாலிபரிடம் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.

திருநெல்வேலி

கடந்த 2017-ம் ஆண்டு திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகம், கீழநத்தம், வெள்ளிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த பாக்கிய பிரகாஷ் (வயது 28) என்பவரிடம், பணம் மற்றும் செல்போன் கொள்ளையடித்த குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மேற்சொன்ன வழக்கில் குற்றவாளிகளான ராஜவல்லிபுரத்தை சேர்ந்த நிஷாந்த்(31), சரித்திர பதிவேடு குற்றவாளி மதிபாலன்(31), கீழப்புத்தனேரியை சேர்ந்த ஆறுமுகராஜ்(27), துறையூரை சேர்ந்த ஆனந்த்(27) ஆகிய 4 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி கல்யாண மாரிமுத்து நேற்று குற்றவாளிகளுக்கு, கூட்டுக் கொள்ளை குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் திருநெல்வேலி தாலுகா காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி (தற்போது தென்காசி மாவட்டம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 27 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 22 நபர்களுக்கும், கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும், போக்சோ வழக்கில் 2 நபர்களுக்கும், கூட்டுக் கொள்ளை வழக்கில் 1 நபருக்கும் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

1 More update

Next Story