டிக்கெட் இல்லாமல் 51 ஆயிரம் பேர் பயணம்: ரூ.2.86 கோடி அபராதம் - அதிரடி காட்டிய ரெயில்வே

கடந்த 15 நாட்களில் டிக்கெட் எடுக்காமல் ரெயில்களில் பயணித்த பயணிகளிடமிருந்து ரூ.2.86 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னையில் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில் சேவைகளை நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுவே, பண்டிகை காலங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். இதுபோன்ற கூட்ட நெரிசல் நேரங்களில் ஏராளமானோர் ரெயில்களில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அவர்கள் மீது ரெயில்வே சட்டம் பிரிவு 138-கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில், சென்னை கோட்டத்தில் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த 25-ந்தேதி முதல் கூடுதல் டிக்கெட் பரிசோதகர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி, கடந்த செப்டம்பர் 25-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரையில் 15 நாட்களில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 51 ஆயிரத்து 557 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 86 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, ஆயுதபூஜை விடுமுறையின்போது டிக்கெட் இல்லாமல் பயணித்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்துள்ளனர். அதில் மின்சார ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களே அதிகம் உள்ளனர்' என்றார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com