''65 ஆயிரம் மனிதர்களின் உயிர் உருவப்பட்டிருக்கிறது...தாங்க முடியவில்லை'' - வைரமுத்து


65,000 people have been killed...I cant bear it - Vairamuthu
x
தினத்தந்தி 21 Sept 2025 12:15 PM IST (Updated: 21 Sept 2025 12:22 PM IST)
t-max-icont-min-icon

ஐ.நாவின் எண்பதாம் அமர்வில் இந்த நிர்மூலம் நிறுத்தப்பட வேண்டும் என வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

சென்னை,

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

''இஸ்ரேல் எங்கிருக்கிறது? தெரிய வேண்டியதில்லை, அது இருக்கிறது என்று தெரிந்தால் போதும்; ஓர் இனத்தை அழிக்கிறது என்று தெரிந்தால் போதும்

உலகப்படத்தில் பாலஸ்தீனம் எங்கிருக்கிறது? தெரியவேண்டியதில்லை அது இருந்தும் இல்லாமல் இருக்கிறது என்று தெரிந்தால் போதும்.

65ஆயிரம் மனிதர்களின் உடல் உடைக்கப்பட்டு உயிர் உருவப்பட்டிருக்கிறது. செய்துமுடிக்கப்பட்ட ஒரு செயற்கைப் பஞ்சத்தால் நர மாமிசம் உண்ணக்கூடப் பல உடல்களில் சதைகள் இல்லை

முளைக்குச்சியில் குத்திவைக்கப்பட்ட மண்டை ஓடுகளாய்க் குழந்தைகள்... குழந்தைகள்...மனிதாபிமானமுள்ள யாருக்கும்

மனம் பதறவே செய்யும். பாலைவனத்து மணலை அள்ளி வாயில்போட்டு மெல்லும் ஒரு சிறுவனைப் பார்த்து நாற்காலிவிட்டு நகர்ந்து எழுந்தேன்; தாங்க முடியவில்லை

இந்த இனத் துயரம் முடிய வேண்டும். நாளை நிகழ்வதாக அறியப்படும் ஐ.நாவின் எண்பதாம் அமர்வில் இந்த நிர்மூலம் நிறுத்தப்பட வேண்டும்; உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; அமெரிக்கா வீட்டோ அதிகாரத்துக்கு விடுமுறை விடவேண்டும்

மிஸ்டர் நெதன்யாகு கழற்றிவைத்த இதயத்தை எடுத்து இருந்த இடத்தில் அணிந்துகொள்ளுங்கள். இது இந்தியாவின் தெற்கிலிருந்து ஈரல் நடுங்கும் ஒரு மனிதனின் ஈரக் குரல்'' என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story