இடுவாய் கிராமத்தில் குப்பைக்கிடங்கு; மக்களின் எதிர்ப்புக்கு அண்ணாமலை கருப்பு கொடி ஏந்தி ஆதரவு


இடுவாய் கிராமத்தில் குப்பைக்கிடங்கு; மக்களின் எதிர்ப்புக்கு அண்ணாமலை கருப்பு கொடி ஏந்தி ஆதரவு
x

குப்பைக்கிடங்கு அமைப்பதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மக்கள் மீது அடக்குமுறையை திமுக ஏவுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக, இடுவாய் கிராமத்தில் குப்பைக்கிடங்கு அமைக்கும் திமுக அரசின் முயற்சியை கண்டித்து, இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, இடுவாய் கிராம மக்களும், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சொந்தங்களும், ‘கருப்பு தினம்’ அறிவித்திருப்பது, மக்கள் குரலை மதிக்காத திமுக அரசுக்கான வலுவான எச்சரிக்கை. இடுவாய் மக்களின் ஜனநாயக ரீதியிலான இந்த போராட்டத்திற்கு, கருப்பு கொடி ஏந்தி, எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அளவில், 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தூய்மை பட்டியலில், சென்னை 38ஆவது இடத்திலும், கோவை 28ஆவது இடத்திலும் இருப்பதும், அதே பட்டியலில் மதுரை மிகவும் அசுத்தமான நகரமாக கடைசி இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருப்பதும் திமுக அரசின் நகர்ப்புற நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மேலும், 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட 95 நகரங்களில், திருப்பூர் 77ஆவது இடத்திலும், ஈரோடு 94ஆவது இடத்திலும் இருப்பது வெட்கக்கேடான நிலை.

இந்த அவல நிலைக்குக் காரணமான திமுகவின் கமிஷன் அரசியலை மறைக்க, சுற்றுவட்டார கிராமங்களில் குப்பைகளைக் கொட்டி, திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இடுவாய் கிராம மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது.

இடுவாய் மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு, நாங்கள் துணை நிற்கிறோம். அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத இந்த மக்கள் குரல், வரும் தேர்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் தீர்ப்பாக அமையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story