காதலியை திருமணம் செய்த வாலிபர்.. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது நடந்த கொடூரம்


காதலியை திருமணம் செய்த வாலிபர்.. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது நடந்த கொடூரம்
x

விபத்தில் பலியான ஆறுமுகம், சென்னியம்மாள், நாராயணன்

காதலியை திருமணம் செய்த 2 மாதங்களில் கார் மோதி பெற்றோருடன் புதுமாப்பிள்ளை பலியானார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). விவசாயி. இவரது மனைவி சென்னியம்மாள்(42). இவரது மகன் நாராயணன்(22). டிப்ளமோ படித்துள்ள இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

நாராயணனும், துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமரின் மகளும், பி.ஏ. பட்டதாரியான பரமேஸ்வரி என்பவரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி திருக்கோவிலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி திருமண வரவேற்பு அழைப்பிதழ் அச்சடித்து, ஆறுமுகம் குடும்பத்தினர் தங்களது உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை, நாராயணன் தனது பெற்றோரை மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் பகுதிக்கு அழைத்துச்சென்று உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார். பின்னர் 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். சங்கராபுரம்-திருக்கோவிலூர் சாலையில் பகண்டை கூட்டுரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக நாராயணன் குடும்பத்தினர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தறிகெட்ட மோட்டார் சைக்கிளும், காரும் சாலையோர பள்ளத்தில் இறங்கி ஓடியது. இந்த விபத்தில் நாராயணன் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்களை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகமும், சென்னியம்மாளும் அடுத்தடுத்து பலியானார்கள். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் நாராயணனும் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேரது உடல்களை பார்த்து உறவினர்களும், புதுப்பெண்ணும் கதறி அழுதது காண்போரின் கண்களை குளமாக்கியது. இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதனிடையே விபத்தை ஏற்படுத்தியவர், தப்பி ஓடிவிட்டார். அந்த காரை பகண்டை கூட்டுரோடு போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த காரில் விவசாயி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் தமிழக வெற்றிக் கழகம் ஸ்ட்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது. விபத்தை ஏற்படுத்தியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story