அதிமுகவினர் எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளனர்: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக திமுக தன் போராட்டத்தை தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
சட்டப் போராட்டத்தின் வழியே திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தருகின்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவையாக இருக்கும் என்பதுதான் வரலாறு. கவர்னரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய சிவப்பு எழுத்து தினம் ஆகும்.
மாநில உரிமைகளுக்கு ஆபத்து நேரும்போது, திமுகவின் தலைவர் என்ற பொறுப்பிலும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள உங்களில் ஒருவனான நான் மாநில உரிமை காக்கும் சட்டப்போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன். திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக எனத் தமிழ்நாட்டின் 39 மக்களவை எம்.பி.க்களும், மாநிலங்களவையில் உள்ள திமுக எம்.பி.க்களும் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதையும் தம் வயப்படுத்தி, மாநில நலனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கை குரலாக ஒலித்தார்கள்.
உரிமைக்கான குரலாகத் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். நீதிக்கட்சியில் தொடங்கி அதன் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் வரை உரிமைப் போராட்டம் ஓயவில்லை. போராட்டம் ஒரு புறம், ஆட்சி நிர்வாகம் மறுபுறம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணியும் பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுள்ள அறிவிப்புகள் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கியதகாவும் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை மேம்பாட்டை மையப்படுத்தியும் அமைந்துள்ளன. 2024-25-ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு 9.69 சதவிகிதம் என்ற அளவில் உயர்ந்து நிற்பதும், பரவலாக்கப்பட்ட வளர்ச்சியின் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் ஏற்றம் பெற்று, பெண்கள் பங்கேற்புடனான வேலைவாய்ப்புகள் பெருகியிருப்பதும் மத்திய அரசின் புள்ளிவிவரத்தின் மூலமாகவே வெளிப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியை அடைவதற்கும் தொடர்வதற்கும்தான் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு மைல்கல்லாக நேற்று முன்தினம் 8-ம் தேதி வெளியான மகத்தான தீர்ப்பு அமைந்துள்ளது. பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் முதன்மை இடங்களைப் பிடித்துள்ளதை அனைவரும் அறிவோம்.
இந்தப் பெருமையைச் சிதைக்கும் வகையில், பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரத்தைக் கொண்டிருந்த கவர்னர் உயர்கல்வியில் அறமற்ற அரசியலைப் புகுத்தி, காவிச் சாயம் பூசிக்கொண்டிருப்பதற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் தராமல், ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் அதிகார அத்துமீறல்களைத் தொடர்ந்து கொண்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கவர்னர்களின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான வழக்குகள் என்பவை சுப்ரீம் கோர்ட்டுக்கு புதியதன்று. மத்திய பாஜக அரசு தன்னால் வெற்றிபெற முடியாத மாநிலங்களில், மாற்றுக் கட்சி அரசுகளின் செயல்பாடுகளைத் தடுப்பதற்காகவே கவர்னர்களை நியமித்து, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக அல்லாத அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள பாஜக கவர்னர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் வழக்குகள் உள்ளன.
கடந்த 8-ம் தேதி அன்று காலையில் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்ற நிலையில், தீர்ப்பு வெளியாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. தமிழ்நாடு கவர்னரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது நியமனப் பதவியில் உள்ள ஆளுநரின் வேலை என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்பர்திவாலா, மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளிவாகத் தெரிவித்தது.
தாய்க்கழகத்தின் பாராட்டு எப்போதுமே கூடுதல் உழைப்புக்குத் தெம்பு தரக்கூடியது. அதனால்தான், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் கவர்னரின் அத்துமீறல்களைத் தகர்த்தெறிந்த வெற்றி தீர்ப்பு வெளியான வேகத்தில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
சமூகநீதியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். சமூகநீதிக்கும், மாணவர்களுக்கும் மக்களுக்கும் எதிரான பாஜகவினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுகவினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர். மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான திமுக, நீட் தேர்விலும் விலக்கு பெறும் வகையில் தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
கவர்னரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக திமுக தன் போராட்டத்தை தொடரும்.... தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.