அன்புமணி ‘தனிக்கட்சி தொடங்குவது தான் நல்லது’ டாக்டர் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்


அன்புமணி ‘தனிக்கட்சி தொடங்குவது தான் நல்லது’ டாக்டர் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2025 3:30 AM IST (Updated: 17 Oct 2025 3:31 AM IST)
t-max-icont-min-icon

என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்று நிருபிக்க வேண்டுமானால், ஒரு வாரத்துக்குள் புதிய கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம்,

பா.ம.க.வுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனிக்கட்சி தொடங்குவது தான் அன்புமணிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நல்லது என்று டாக்டர் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுதொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக நானே சேர்ந்தேன். மறுநாளே வீடு திரும்பி விட்டேன். தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் தலைவர்களை தவிர்த்து, மற்றவர்கள் என்னை நேரிலோ, அலைபேசியிலோ அழைத்து நலம் விசாரித்தனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே என் நலனை விசாரிக்கவில்லை.

நான் ஆஸ்பத்திரியில் இருந்தபோது அன்புமணி, ‘‘எனக்கு ஏதாவது நேரிட்டால் தொலைத்து போடுவேன். சும்மா இருக்க மாட்டேன். வேடிக்கை பார்க்க மாட்டேன், என்னை வைத்து நாடகமாடி வருகிறார்கள்’’ என்று எல்லாம் பேசியிருக்கிறார். படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களை பேசியிருக்க மாட்டார். அதனால்தான் ‘அன்புமணிக்கு தலைமைப்பண்பு இல்லை' என்று நிர்வாக குழுவில் சொன்னேன். நோய் தொற்றும் அளவுக்கு நான் வியாதியில் இல்லை.

அன்புமணியிடம் இருப்பது கட்சி என்று சொல்ல மாட்டேன். அது ஒரு கும்பல். அந்த கும்பலுக்கு சில நாட்கள் அவர் தலைவராக இருப்பார். பா.ம.க.வை தோற்றுவித்தது, அதன் உரிமையாளர் நான்தான்.

இப்போது, அதே கட்சி மற்றும் அதே கொடியை வைத்து தன்னுடைய கட்சி என்று சொல்வது நியாயம் இல்லை. இதனை தேர்தல் கமிஷன், கோர்ட்டில் சந்திப்போம். இப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. பா.ம.க.வுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்வதுதான் அவருக்கும் நல்லது. அவரை சுற்றி இருக்கும் அந்த கூட்டத்துக்கும் நல்லது. கட்சியில் பொறுப்பு மட்டும்தான் கிடைக்கும். எம்.எல்.ஏ., எம்.பி. பதவி எல்லாம் கிடைக்காது. அன்புமணி தலைமையை ஒரு போலியான அமைப்பாகத்தான் மக்கள் பார்ப்பார்கள்.

என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்று நிருபிக்க வேண்டுமானால், ஒரு வாரத்துக்குள் புதிய கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம். இதுவரை 8 மாதத்தில் தனிக்கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன். இனிமேல், என் பெயரை பயன்படுத்த கூடாது. இனிஷியல் வேண்டுமானால் போட்டு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story