பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன. அ.தி.மு.க.-பாஜக இடையே கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது.
இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்கும் முயற்சிகளையும் பாஜக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை பனையூரில் உள்ள இல்லத்தில் பாஜகவின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாக தெரிகிறது. அ.தி.மு.க.-பாஜக கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. டாக்டர் அன்புமணி ராமதாசை பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்தித்து பேசியது அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலையொட்டி பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோனை நடத்தினார். கட்சியின் வளர்ச்சி, உட்கட்சி பூசல் விவகாரம், தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கருத்து மோதல் காரணமாக இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






