நெல்லையில் அண்ணாமலை நற்பணி மன்றம் தொடக்கம்

சமூக சேவை செய்வதற்காக இந்த மன்றத்தை தொடங்கி உள்ளோம் என்று நற்பணி மன்ற நிறுவனர் கூறினார்.
நெல்லை,
தமிழக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. ஐ.பி.எஸ். அதிகாரி பணியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்த இவர் பாஜக மாநில தலைவராக சிறப்பாக செயல்பட்டார். இதனால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்ததுடன் அண்ணாமலைக்கு ஆதரவாளர்களும் பெருகினர். பின்னர் அவர் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவை பிரதிபலிக்கும் வகையில் நெல்லையில் அண்ணாமலை நற்பணி மன்றத்தை தொடங்கி உள்ளனர். உத்தமபாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த பாஜக ஆன்மிக பிரிவு முன்னாள் நிர்வாகி வேல்கண்ணன் என்பவர் அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள் வைத்துள்ளார். இது சமூக வலைதளங்களிலும் பரவியது.
இதுகுறித்து அண்ணாமலை நற்பணி மன்ற நிறுவனர் வேல்கண்ணன் கூறுகையில், ‘‘அண்ணாமலை மீது எங்களுக்கு உள்ள ஈர்ப்பால்தான் நற்பணி மன்றத்தை தொடங்கினோம். நாங்கள் ஏற்கனவே சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறோம். அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் அரசியல் பேசுகிறார். அரசியல் ஆளுமை அவரிடம் இருக்கிறது, அதுதான் எங்களை கவர்ந்துள்ளது. சமூக சேவை செய்வதற்காக இந்த மன்றத்தை தொடங்கி உள்ளோம்’’ என்றார்.






