முதல்-அமைச்சர் நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளை அனுப்ப கலெக்டர் கடிதம்-அண்ணாமலை கண்டனம்

திருவள்ளூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளை அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டர் கடிதம் அனுப்பியதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
வரும் 19.04.2025 அன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகவும், அதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகளில் இயங்கும் பேருந்துகளை, இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக அரசு நடத்தும் நிகழ்ச்சிகள் என்றாலே, பொதுமக்கள், வணிக நிறுவனங்களிடம் வசூல் வேட்டை முதற்கொண்டு, கூட்டத்தை காட்டுவதற்காக, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் தரமாட்டோம் என்று கூறி ஏழை எளிய மக்களை மிரட்டி அழைத்து வருவது, தனியார் பள்ளி, கல்லூரிகளை மிரட்டி வாகனங்களை வாங்குவது என அடாவடித்தனம் செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது திமுக. தென்காசியில் அரசு மருத்துவர்களிடமே கட்டாய வசூல் வேட்டை நடத்தப்பட்ட செய்திகள் நேற்று வெளிவந்தன.
இப்படி பொதுமக்களுக்குத் தொடர்ந்து இன்னல்களைக் கொடுக்கும் திமுகவின் இந்த அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத கல்லூரிகளா, பள்ளிகளா? எதற்காக, சாமானிய மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






