சட்டசபை தேர்தல்: தவெக தலைவர் விஜய் போட்டியிட குறிவைக்கும் 3 தொகுதிகள்..!


சட்டசபை தேர்தல்: தவெக தலைவர் விஜய் போட்டியிட குறிவைக்கும் 3 தொகுதிகள்..!
x
தினத்தந்தி 10 Dec 2025 10:29 AM IST (Updated: 10 Dec 2025 11:30 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டால், 'வெற்றி நிச்சயம்' கிடைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும், நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் இன்னொரு அணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண இருக்கின்றன.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க இருப்பதால், முதல் தேர்தலிலேயே வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டிவருகிறது. "தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு தருவோம்" என்று அக்கட்சி கூறிவந்தாலும், இன்னும் கூட்டணி கணக்கு தொடங்கவில்லை.

அடையாளம் காணப்பட்ட 3 தொகுதிகள்!

கூட்டணிக்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை.. எவை..? என்பதும் ஆராயப்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டால், 'வெற்றி நிச்சயம்' கிடைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்துக்கான வியூக வகுப்பாளர் ஒருவர் எடுத்த சர்வே மூலம் விஜய் போட்டியிட 3 தொகுதிகள் உகந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, திருவாடானை ஆகிய தொகுதிகள்தான் அவை.

விஜய் வைக்கும் குறி எங்கே?

திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இதேபோல், மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.செல்லூர் ராஜூவும், திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.கருமாணிக்கமும் எம்.எல்.ஏ.வாக உள்ளனர்.

இந்த 3 தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகளவில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால், விஜய்யின் குறி, இந்தத் தொகுதியாகத்தான் இருக்கக்கூடும் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திருச்சியில் இருந்துதான் தொடங்கினார். அவர் பிரசாரம் செய்த காந்தி மார்க்கெட் மரக்கடை திருச்சி கிழக்கு தொகுதியில்தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story