அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் திட்டம் - திருமாவளவன்


அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் திட்டம் - திருமாவளவன்
x

கோப்புப்படம் 

பெரியார் குறித்து அவதூறாக வீடியோ வெளியிடப்பட்டதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை

திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை பா.ஜ.க. தான் வழிநடத்துகிறது. அ.தி.மு.க. அமைதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும். இங்கு சமூக நீதிக்கான குரல் கடந்த அரை நூற்றாண்டாக வலுவாக ஒலித்து கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் வந்த திராவிட கட்சியில் இருந்து சென்றவர்தான் பா.ஜ.க.வின் தலைவர் நயினார் நாகேந்திரன். தெரிந்துதான் அவரை தலைவர் ஆக்கி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் உடனடி திட்டம். இதை எப்போது அ.தி.மு.க. உணரப்போகிறது? இப்போதும் 65 எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சி, ஆண்ட கட்சி அது. முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்திய பா.ஜ.க. சங்பரிவார் அமைப்புகளோடு அ.தி.மு.க. பயணிப்பது தற்கொலைக்கு சமமானது.

பா.ம.க., தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள். இது ஒரு யூகமான கேள்வி. அது நடந்தால் பார்க்கலாம். தி.மு.க. கூட்டணியில் 2011-ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருந்திருக்கிறது. அதன் பிறகு பா.ம.க.வின் நடவடிக்கைகளால்தான் நாங்கள் பல அவதூறுகளுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பெரியார் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். பெரியாரை பற்றி அவதூறு பரப்பிய பிறகும் அவர் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை ஏற்றுக்கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story