மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு


மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு
x

பழைய நிலையில் பணி வழங்கக்கோரி மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி முதல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர். தொடர்ந்து மாநகராட்சி கட்டிடத்தின் நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். பின்னர், ஆகஸ்டு 13-ந்தேதி இரவு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தொடர்ச்சியாக சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், தனியார்மயம் இல்லாமல் பழைய நிலைமையிலேயே மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக மீண்டும் பணி வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை தூய்மை பணியாளர்கள் மெரினா கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த கடலோர பாதுகாப்பு படையினர் அவர்களை வெளியே வரும்படி கூறினார்கள். ஆனால் யாரும் வெளியே வரவில்லை. இதையடுத்து, அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினாா்கள். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடல் அலையில் மிகவும் ஆபத்தான முறையில் போராட்டம் நடத்தியதால், போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கினார்கள். தொடர்ந்து, கடலுக்குள் சென்ற போலீசார் ஒவ்வொரு தொழிலாளராக வெளியே குண்டுக்கட்டாக இழுத்து வந்தனர். அப்போது, போலீசார் மற்றும் போராட்டகாரர்கள் கடல் அலையில் சிக்கி, முழுவதும் நனைந்தபடி வெளியே வந்தனர்.

கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரும், ஆதரவாக வந்த 22 பேரும் என மொத்தம் 87 தூய்மை பணியாளர்களை போலீஸ் வாகனங்களில் ஏற்றி மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மாலை அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் மெரினா கடற்கரையில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் சென்னை மெரினாவில் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story