மீனவர்களின் பிரச்சினையை ஓரவஞ்சனையுடன் அணுகும் மத்திய அரசு - திருமாவளவன்

மத்திய அரசு நினைத்தால் தமிழக மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பெரம்பலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இந்த வேளாண் பட்ஜெட்டில் அது தொடர்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மை. ஆனால் மானிய கோரிக்கையின் போது அவர்களின் கோரிக்கை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அசலும், வட்டியும் சேர்த்து கட்டினால்தான் வங்கியில் நகையை திருப்ப முடியும் என்று கொண்டு வந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து கட்டாயமாக வலியுறுத்துவோம், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவோம். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பது தொடர் கதையாக நீடிக்கிறது. மத்திய அரசு நினைத்தால் தமிழக மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். ஆனால் தமிழக மீனவர்களின் பிரச்சினையை ஓரவஞ்சனையுடன் மத்திய அரசு அணுகுவதால், இந்த பிரச்சினை தொடருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






