ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
கரூரில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேவேளை, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடந்த 30ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.
பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பதிவை சில நிமிடங்களில் அவர் எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
இதனிடையே, வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி செந்தில்குமார் தலைமையிலான அமர்வுமுன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,நீதிபதி கூறியதாவது;-
ஒரு சிறிய வார்த்தை பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். ஆதவ் அர்ஜுனா போன்றோர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அவர் புரட்சி ஏற்படுத்துவதுபோல் பதிவிட்டுள்ளார். இதற்கு பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதவ் அர்ஜுனா மீது காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்றார்.






