அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்


அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 25 Feb 2025 10:33 AM IST (Updated: 25 Feb 2025 12:30 PM IST)
t-max-icont-min-icon

2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அம்மன் அர்ஜுனன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை.

நாடறிந்த "ஊழல் திலகங்களான" இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சினைகளையும், அதனை சரிசெய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை". அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் நம் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது ஏவப்பட்டுள்ள இந்த சோதனை.

இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்புச் சகோதரர் அம்மன் அர்ஜுனனை திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது, தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்! 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story