சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயிலில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பல்லாவரம் ரூட் தல என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளனர்.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயிலில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பல்லாவரம் ரூட் தல என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளனர். இந்த கணக்கை பின்தொடரும் பச்சையப்பன் மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘யார் ரூட் தல?’ என்பதில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயிலில் பயணம் செய்த பச்சையப்பன், நந்தனம் கல்லூரி மாணவர்கள் இடையே மீண்டும் ரூட் தல தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையில் மின்சார ரெயில், குரோம்பேட்டை ரெயில் நிலையம் வந்ததும், 2 கல்லூரி மாணவர்களும் கீழே இறங்கி வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை, நந்தனம் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் ஆகாஷ் (வயது 18) என்ற மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனம் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்களை கைது செய்தனர்.
இதேபோல் சென்னையில் உள்ள பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரிகளில் படிக்கும் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, அனுப்பம்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் மின்சார ரெயிலில் பயணிக்கும் போது ரூட் தல பிரச்சினை தொடர்பாக மோதிக்கொள்வது வழக்கம்.
அனுப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் 2் கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்ட சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவரான சச்சினை, கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர் தினமும் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரெயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் இருப்பதை கண்ட சச்சின், தான் கைதானதுக்கு காரணமானதாக கூறி மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரை தாக்கினார். பதிலுக்கு அவர்களும் தாக்கினர். இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் மோதலில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இது தொடர்பாக சச்சின் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் பாஸ்கர், மோகன்ராஜ், குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






