பூந்தமல்லி-போரூர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்


பூந்தமல்லி-போரூர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்
x

பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடியும்.

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.

2-ம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி-போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் துாரத்தில் மெட்ரோ ரெயில் சேவை வரும் டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதற்கான பணிகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழித்தடத்தில் 3 முறை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. அப்போது, இந்திய ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டது.

90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் அக்டோபர் மாத இறுதிக்குள் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்கும் என மெட்ரோ ரெயில் நிறுவனம் எதிர்பார்த்தது.

பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடியும். ஆனால், 2 மாதங்கள் ஆகியும் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்கப்படவில்லை. இதற்கிடையே, பாதுகாப்பு சான்றிதழ் அடுத்தமாதம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 More update

Next Story