நிலம் விற்பனையில் பார்ட்னருடன் தகராறு; நிதி நிறுவன உரிமையாளர் கொடூர கொலை

வெள்ளகோவில் அருகே கம்பியால் தாக்கி உயிர் போகாததால் காரை ஏற்றி நிதி நிறுவன உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார்.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமம் வரக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 41). இவரது மனைவி பாலாமணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரமூர்த்தி, பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் அவர் உறவினரான ரியல் எஸ்டேட் அதிபர் ராஜ்குமார் என்பவருடன் சேர்ந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
நிலம் வாங்கி வீட்டுமனையாக பிரித்தது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாலும், அவ்வப்போது ஈஸ்வரமூர்த்தி வெள்ளகோவிலுக்கு வந்து செல்வார். அதன்படி தீபாவளிக்கு ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு செல்ல முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வெள்ளகோவில் பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டார். ஸ்கூட்டரை ஈஸ்வரமூர்த்தி ஓட்டினார். பின்னால் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி அமர்ந்து இருந்தார்.
இவர்களது ஸ்கூட்டர், வரக்காளிபாளையத்தை அடுத்த வள்ளியரச்சல் சாலை பிரிவு அருகே வந்தபோது பின்னால் கார் ஒன்று வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார் ஈஸ்வரமூர்த்தி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.
இதனால் நிலை குலைந்து தந்தையும், மகனும் கீழே விழுந்தனர். இதில் கிருஷ்ணமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அப்போது வலியால் துடித்த ஈஸ்வரமூர்த்தி, தந்தைக்கு என்னாச்சு என்று எழுந்து பார்க்க முயன்றார். அப்போது காரை நிறுத்தி விட்டு வந்த ராஜ்குமார் 'நீ இன்னும் சாகலையா' என்று கூறி இரும்பு கம்பியால் ஈஸ்வரமூர்த்தியின் தலையில் தாக்கினார். ஆனாலும் வெறி அடங்காத ராஜ்குமார் காரை முன்னும், பின்னும் இயக்கி ஈஸ்வரமூர்த்தி மீது ஏற்றினார். இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அவர்கள் தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.






