ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளரிடம் பேசியது எப்படி குற்றச்சாட்டாகும்? அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
சென்னை,
பிளைட் மோடில் இருந்த செல்பேசியை ஆன் செய்தபோது ஞானசேகரன் முதலில் காவல் அதிகாரியிடம் பேசினார். அடுத்த ஞானசேகரன் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் அடிக்கடி பேசினார்.இந்த சண்முகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தொடர்பில் இருப்பவர்.அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? ஞானசேகரன் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டது ஏன்? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தநிலையில், சென்னை எழும்பூர் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் மோதிரம் அணிவித்தனர்.அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அண்ணா பல்கலைகழக சம்பவத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல் துறை மிகச்சிறப்பாக நடவடிக்கை எடுத்து 5 மாதத்தில் தண்டனை தரப்பட்டுள்ளது. லீசாரின் நடவடிக்கைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.அண்ணாமலை கூறியதை நானும் பார்த்தேன். அவர், சண்முகம் என்ற வட்டச் செயலாளர் என்னை அழைத்ததாக தெரிவித்து உள்ளார். இது ஒரு குற்றச்சாட்டா?
52 வட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் சண்முகமும் ஒருவர். ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளரிடம் பேசியது எப்படி குற்றச்சாட்டாகும்? ஒவ்வொரு நாளும் 10 - 15 பேர் எனக்கு போனில் அழைப்பார்கள். வட்ட செயலாளர் போன் செய்தார். இதனால், சுப்பிரமணியனை விசாரிக்க வேண்டும் என சொல்கின்றனர். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமா என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






