இந்து மத மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு கேலி செய்கிறது; அண்ணாமலை சாடல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், தீபத்தூண் அருகே தர்கா இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்துவிட்டது.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதனால், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் இந்து மத மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக கேலி செய்கிறது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர். நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.
என தெரிவித்துள்ளார்.






