திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் மூலம் பாமகவுடன் கூட்டணிக்கு தூதா...?


திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் மூலம் பாமகவுடன் கூட்டணிக்கு தூதா...?
x

பாமகவில் உள்கட்சி பூசல் பூதாகரமாகி கட்சி 2 ஆக பிரிந்துள்ளது.

சென்னை,

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக தி.மு.க. சார்பில் 2-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முறைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதால் பாஜக, அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பாமகவில் இருந்து டாக்டர் அன்புமணியை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீக்கி உள்ளதால் அவருக்கும் அழைப்பு கடிதம் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் தேர்தல் கூட்டணிக்கான அழைப்பாகவும் கருதப்படுகிறது. பா.ம.க.வில் உள்கட்சி பூசல் பூதாகரமாகி டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணி, டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மற்றொரு அணி என அக்கட்சி 2 ஆக பிரிந்துள்ளது.

இந்தநிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு மட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜி.கே.மணி போன்ற நிர்வாகிகள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படும் வேளையில் இந்த அழைப்பு கடிதம் கூட்டணிக்கான தூதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சமீபத்தில் டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ஜனதாவின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. சந்தித்து பேசி இருந்தார். எனவே அவர், பா.ஜனதா கூட்டணி நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

1 More update

Next Story