'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி புதிய பிரசாரம் முன்னெடுப்பு


உருட்டுகளும் திருட்டுகளும் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி புதிய பிரசாரம் முன்னெடுப்பு
x
தினத்தந்தி 25 July 2025 12:52 PM IST (Updated: 25 July 2025 12:54 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புதுக்கோட்டை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

அதன்படி 15-வது நாளான நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், தமிழகத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஆலங்குடியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் புதிய பிரசார முன்னெடுப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பிரசார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற எழுச்சி பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி, நேற்று புதுக்கோட்டை மாவட்டம் வரை சுமார் 46 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 15 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். இந்த எழுச்சி பயணத்தின்போது மக்கள் எனக்கு அளித்த வரவேற்பு, ஆரவாரம், அவர்களின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமரின் பயணத்திட்டம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. பிரதமர் மோடியை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை. நாங்கள் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தால் தவறா?. உள்துறை மந்திரியை சந்தித்தால் என்ன தப்பு?. இந்திய நாட்டின் உள்துறை மந்திரி தானே அவர்?. முதல்-அமைச்சரும் அவரது மகனும் யார்வீட்டு கதவை தட்டினர்?.

மக்களின் பிரச்சினைகள் தெரியாத அரசாங்கமாக தான் திமுக அரசாங்கம் உள்ளது. திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல. கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள். திமுக செயல்படுத்தாத அறிவிப்புகள் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்படும். அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story