காயமடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் தையல் போட்டது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி


காயமடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் தையல் போட்டது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி
x

கோப்புப்படம் 

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சீரழிவின் உச்சத்தை அடைந்துவிட்டன என்று அன்புமணி கூறியுள்ளார்.

சென்னை

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய ஒருவரின் காயத்திற்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சீரழிவின் உச்சத்தை அடைந்துவிட்டன என்பதற்கு இதை விட மோசமான சான்று இருக்க முடியாது.

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்களும், சிறிய காயங்களுக்கான சிகிச்சையை மருத்துவர்களின் வழிகாட்டுதலில் அதற்கான துணை மருத்துவப் பணியாளர்களும்தான் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அதை மீறி மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் கையாளும் உரிமையை தூய்மைப் பணியாளருக்கு வழங்கியது யார்?

நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதை விட கொடுமையானது இது தொடர்பாக மருத்துவத் துறையின் மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள பதில்தான். மருத்துவர்களின் கண்காணிப்பில்தான் தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாகவும், அவர் சிறப்பாக சிகிச்சை அளித்ததாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனில் மருத்துவத்துறையினர் விருப்பம் போல விளையாடக் கூடாது. இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story